Search This Blog

Monday, 9 September 2013

இளையராஜாவின் இசையில் பாடிய கானா வேல்முருகன்!

இளையராஜாவின் இசையில் பாடிய கானா வேல்முருகன்!

சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் கானா பாடகர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் என்ற பாடலை கானா உலகநாதன் பாடினார். அந்த ஒரு பாடல் உலக அளவில் அவரை கொண்டு சென்றது. கச்சேரிகளுக்காக அவர் செல்லாத நாடுகளே இல்லை என்கிற அளவுக்கு ஒரே பாடலில் பெரிய ரவுண்டே வந்தார்.

அவரையடுத்து இப்போது கானா வேல் முருகன், கானா பாலா உள்ளிட்ட சில பாடகர்கள் சினிமாவில் வளர்ந்து வருகின்றனர். இதில் கானாவேல்முருகன், மதுரையில் இருந்து சென்னை வந்து செட்டிலானவர். ஒரு கல் ஒரு கண்ணாடியில் இடமபெற்ற - வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலே, கழுகு படத்தில் - ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் உள்பட பல ஹிட் பாடல்களை பாடியிருப்பவர்.

இவருக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி விட வேண்டும் என்பது இவரது நீண்டகால கனவாம். இந்த நிலையில், மரியான் படத்தில் கொம்பன் சுறா பாடலை பாட ஏ.ஆர்.ரகுமான் அழைத்தபோது தனது இரண்டு கனவுகளில் ஒருகனவு நிறைவேறப்போகிறது என்ற சந்தோசத்துடன் சென்று பாடிக்கொடுத்தாராம். ஆனால், பின்னர் இவர் பாடியதை ட்ராக்கிற்கு வைத்துக்கொண்ட ரகுமான்,படத்துக்கு யுவன்ஷங்கர்ராஜாவை வைத்து பாட வைத்து விட்டார்.

இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏமாற்றமடைந்தார் வேல்முருகன். இருப்பினும் இப்போது இளையராஜா இசையமைக்கும் ஒரு ஊர்ல என்ற படத்தில் ஒரு டைட்டீல் பாடலை பாட வேல்முருகனை அழைத்தார்களாம். அதையடுத்து இன்னும் உற்சாகத்துடன் சென்று அந்த பாடலை பாடிக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறாராம். அந்த படலை இளையராஜாதான் பாடுவதாக இருந்தாராம். பின்னர் ஒரு புதிய குரலை பயன்படுத்தலாமே என்று யோசித்தபோதுதான் வேல்முருகனுக்கு அந்த வாய்ப்பு சென்றதாம்.

இப்போது, இந்த பாடலையும் ட்ராக்காக மாற்றி விடக்கூடாது வெற்றி வேல் முருகா என்று முருகப்பெருமானை வணங்கிகொண்டிருக்கிறார் கானா வேல்முருகன்.

No comments:

Post a Comment