இந்தியா சினிமா நூற்றாண்டு விழா இன்று நிறைவு - அமிதாப், எம்.எஸ்.வி., உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி விருது வழங்குகிறார்
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி, எம்.எஸ்.விஸ்வநாதன், பாலசந்தர் உள்ளிட்ட 43 திரையுலக ஜாம்பவான்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இந்த விழாவில் நான்கு மாநில முதல்வர்களும், ஏராளமான திரைநட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா, சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த, 21ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நிகழ்ச்சியின் முதல்நாளை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்றைய தினம் தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நாளில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகளும், மூன்றாம் நாளில் மலையாள திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து நான்கு மாநில திரையுலகினருக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நிறைவு நாள் விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.
43 பேருக்கு விருது
இந்திய திரையுலகில் சாதனை படைத்த இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை ஸ்ரீதேவி, இயக்குநர் சிகரம் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உள்ளிட் 43 கலைஞர்களுக்கு ஜனாதிபதி தனது கைகளால் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.
4500 போலீசார் குவிப்பு
ஜனாதிபதி, கவர்னர் மற்றும் தமிழக முதல்வர் உட்பட நான்கு மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் விழா என்பதால், தமிழக அரசு, பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக, சென்னையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்கள், தாமரைக்கண்ணன், ராஜேஷ்தாஸ்,குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மறறும் தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில், 6 இணை கமிஷனர்கள், 16 துணை கமிஷனர்கள், 40 உதவி கமிஷனர்கள் உட்பட, 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
No comments:
Post a Comment