ஹன்சிகா வளர்ச்சியில் பிரமிக்கிறேன் -நடிகர் சூர்யா
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் சிங்கம்-2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி சூர்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சிங்கம் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. எனக்கும் முக்கிய படமாக அமைந்தது. எனவே “சிங்கம்-2” படத்தை எடுத்துள்ளோம். சிங்கம் படத்தில் உள்ளூர் வில்லன்கள் இருப்பார்கள். “சிங்கம்-2” படத்தில் சர்வ தேச வில்லன்களுடன் மோதுவதுபோல் கதை இருக்கும். போலீஸ் வேடங்களில் விட்டு விட்டு நடிக்கிறேன். வித்தியாசமாகவும் வருகிறேன்.
எனவே போலீஸ் கேரக்டர்கள் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாது. “சிங்கம்-2” படத்தில் இரண்டு மடங்கு உழைத்து இருக்கிறேன். காட்சிகளில் யதார்த்தம் இருக்கும். தமிழ்நாடு போலீஸ் என்பது மாறி, இந்திய போலீஸ் என்று அழைக்கும் விதமாக என் கேரக்டர் இருக்கும். அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் பிரமாதமாக நடித்துள்ளனர். ஹன்சிகாவுடன் இணைந்து ஏற்கனவே ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த படத்தில் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஹன்சிகாவின் வளர்ச்சி எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. படத்தில் கதையை நகர்த்தும் முக்கிய கேரக்டரில் அவர் வருகிறார். நான் பள்ளிக்கூடம் துவங்கப்போவதாக வதந்திகள் பரவி உள்ளன. அதில் உண்மை இல்லை. பள்ளிக் கூடம் நடத்துவதற்கு நேரம் இல்லை. எதிர்காலத்தில் பள்ளிக்கூடம் துவங்கும் ஆசை இருக்கிறது. அதை முழுமையாக பார்த்துக் கொள்ளும் நேரமும், சூழ் நிலையும் அமைந்தால் நடக்கும்.
இவ்வாறு சூர்யா கூறினார்.
டைரக்டர் ஹரி, ஹன்சிகா, ஒளிப்பதிவாளர் ப்ரியன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment