வரும்போது எதையும் கொண்டு வரவில்லை...! - கமல் பேச்சு
சென்னை: சினிமாவில் நான் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு போகப் போவதுமில்லை. என் முதலீடு நான்தான், என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
‘கற்றது தமிழ்', ‘தங்கமீன்கள்' படங்களின் இயக்குநர் ராம் இயக்கியுள்ள அடுத்த படம் தரமணி. புதுமுகம் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா, ‘தி சோல் ஆப் தரமணி' என்னும் பாடலை எழுதி இசையமைத்து அவரே இந்தப்பாடலை பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா அனுமதியுடன் இந்தப் பாடலை இந்தப் படத்தில் சேர்த்துள்ளனர்.
இந்த தனிப்பாடலை படத்தின் விளம்பரத்துக்காக வெளியிடும் நிகழ்ச்சி நேற்று பிரசாத் லேபில் நடந்தது. இந்தப் பாடலை கமல் ஹாசன் வெளியிட இயக்குநர் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.
பாடலை வெளியிட்ட பிறகு கமல் ஹாசன் பேசுகையில், "நான் எல்லாத்தையும் அடமானம் வச்சி படம் எடுப்பதாக இயக்குனர் ராம் என்னைப் பற்றி கூறினார். இல்லை.. நான் நல்லாத்தான் இருக்கேன்.
சினிமாவில் என் முதலீடு நான்தான். மற்றதெல்லாம் போனஸ். நான் இப்போது போனஸில்தான் வாழ்கிறேன். சினிமாவில் நான் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போது எதையும் கொண்டு போகப் போவதுமில்லை. நான் சினிமாவில் சம்பாதித்ததை திரும்பவும் சினிமாவுக்கே தர விரும்புகிறேன். அதற்கான முயற்சிகள்தான் இப்போது நான் செய்வதெல்லாம்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவு புதியவர்களை வரவேற்க, வாழ்த்த விரும்புகிறேன். அதற்காகவே அவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறேன்.
ஆண்ட்ரியாவின் இந்தப் பாடலைக் கேட்டேன், நன்றாக இருந்தது. அவர் தன் பாடலை முன்பெல்லாம் யாரும் கேட்கமாட்டார்கள் என்றார். அவர் பொய் சொல்கிறார். காரணம், விஸ்வரூபம் படத்தின்போதே அவர் பாடலைக் கேட்டிருக்கிறேன். முன்பைவிட அவர் தமிழும் இப்போது செம்மையடைந்திருக்கிறது, வாழ்த்துகள்," என்றார்.
No comments:
Post a Comment