Search This Blog

Saturday, 31 August 2013

ஆடியோ ரிலீசில் தேர்தல் பிரச்சாரம்: தயாரிப்பாளர்கள் அதிருப்தி!!

ஆடியோ ரிலீசில் தேர்தல் பிரச்சாரம்: தயாரிப்பாளர்கள் அதிருப்தி!!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 9 ந் தேதி தேர்தல் நடக்கிறது. கேயார் தலைமையில் ஒரு அணியினரும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். சிவசக்தி பாண்டியன் தற்போது மூன்றாவது அணி அமைத்து ஓட்டுக்கேட்டு வருகிறார்.

ஓட்டு வேட்டையில் மூன்று அணியினரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த நேரத்தில் எந்த ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடந்தாலும் அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணியைச் சேர்ந்த தயாரிப்பாளரையே சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். நேற்று (ஆகஸ்ட் 30) நடந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கேயார் அணியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். சரி அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அந்த விழாவில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் அம்மா கிரியேஷன் டி.சிவா தேர்தல் பிரச்சாரம் செய்தது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

விழாவில் சிவா பேசியதாவது: நிறைய இளம் தயாரிப்பாளர்கள் சினிமாவுக்கு ஆர்வத்தோடு வருகிறார்கள். தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் அவர்களை சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நசுக்கப் பார்க்கிறது. சினிமாவை தாங்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இந்த நிலையை நீடிக்கவிடக்கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு படம் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்களை இணை தயாரிப்பாளராக்க வேண்டும் என்று புதிதாக வரவுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சட்டம் கொண்டு வரும் என்றார்.

சிவா பேசியது நியாமான கருத்தாக இருந்தாலும் கூட அனைத்து தரப்பு தயாரிப்பாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளும் விழாவில் தங்கள் அணிக்காக அவர் பிரச்சாரம் செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

No comments:

Post a Comment