அக்னி தீர்த்த கடலில் டி.எம்.சவுந்திரராஜனின் அஸ்தி கரைக்கப்பட்டது!
தமிழ் சினிமாவின் சிம்மக்குரலோன் என்று சொல்லப்பட்டவர் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு தனது குரலை வகைப்படுத்தி பாடியவர் டி.எம்.எஸ்., இன்றைக்கும் அவரது சினிமா பாடல்களும், பக்தி பாடல்களும் மக்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட அற்புத குரலுக்கு சொந்தக்காரரான டி.எம்.சவுந்திரராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். சினிமா உலகினர் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதையடுத்து அவரது அஸ்தியை ராமேசுவரம் கடலில் கரைப்பதற்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். டி.எம்.எஸ்ஸின் சொந்த ஊர் என்பதால் அங்கும் ஏராளமான மக்கள் அவரது அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது மகன்களான செல்வகுமார், பால்ராஜ் ஆகியோர் ராமேசுவரம் கடலுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் டி.எம்.சவுந்திரராஜனின் அஸ்தி கரைப்பட்டது. அப்போது அங்கு ஏராளமான சுற்றுவட்டார மக்கள் கூடி அவருக்கு அஞ்சலி கடன் செலுத்தினார்களாம்.
No comments:
Post a Comment