உலகத் தமிழர்களை இசையால் ஆளும் இளையராஜா விரைவில் நலம் பெற வேண்டும்!- வைரமுத்து
சென்னை: இசையால் உலகத் தமிழர்களை ஆளும் இளையராஜா விரைவில் குணமடைய வேண்டும் என்றார் கவிஞர் வைரமுத்து.
அமைதிப்படை 2-க்குப் பிறகு வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள கங்காரு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நேற்று நடந்தது. பாடகர் சீனிவாஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் இசையை சீனிவாசுக்கு நெருக்கமான ஏ ஆர் ரஹ்மான் விஜய் டிவி நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
அதில் மீடியா மற்றும் திரையுலகினர் பங்கேற்க முடியாது என்பதால், கமலா திரையரங்கில் நேற்று இரண்டாவது முறை இசைவெளியீடு நடத்தினர். படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாகவும் (ஏழாயிரம் பாடல் எழுதியதற்காக) இதை நடத்தினர். பப்ளிசிட்டிக்கு பப்ளிசிட்டியுமாச்சு... மக்களும் வந்த மாதிரி ஆச்சு...
விழாவில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் நிறையப் பேசினார். ஆனால் நிறைவாய் அமைந்த கட்டம் ஒன்று வந்தது. அது.. "இன்று உலகத் தமிழர்கள் இதயங்களையெல்லாம் தன் இசையால் ஆளும் இளையராஜா மருத்துவமனையில் இருக்கிறார்.
கிராமிய இசையை வெள்ளை மாளிகைக்கும் கேட்கும்படி செய்த இணையற்ற கலைஞன் அவர். அவர் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக திரும்ப வேண்டும். இன்னும் ஆயிரம் பாடல்களுக்கு அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆசைப்படுகிறேன்," என்றார்.
அந்த வார்த்தைகளில் நெகிழ்ச்சி தெரிந்தது.. உண்மை இருந்தது!
No comments:
Post a Comment