Search This Blog

Friday, 20 December 2013

ஜில்லா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் 5 பட அதிபர்களுக்கு நடிகர் விஜய் உதவி; தலா ரூ.5 லட்சம் வழங்கினார்

‘ஜில்லா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் 5 பட அதிபர்களுக்கு நடிகர் விஜய் உதவி; தலா ரூ.5 லட்சம் வழங்கினார்

‘ஜில்லா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், 5 பட அதிபர்களுக்கு நடிகர் விஜய் தலா ரூ.5 லட்சம் உதவி வழங்கினார்.
பட அதிபர்களுக்கு உதவி
விஜய் நடித்து, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்து, நேசன் டைரக்டு செய்த ‘ஜில்லா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில், நடிகர் விஜய் தன்னை வைத்து ஆரம்ப காலத்தில் படம் தயாரித்த 5 பட அதிபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார். விஜய்யிடம் இருந்து உதவி பெற்ற அந்த பட அதிபர்களின் பெயர் விவரம் வருமாறு:–
1.எம்.ராஜாராம் (வசந்த வாசல்), 2.எஸ்.சவுந்தர பாண்டியன் (ராஜாவின் பார்வையிலே), 3.ஆர்.சாந்தா (மின்சார கண்ணா) இவர், மறைந்த பட அதிபர் கே.ஆர்.ஜி.யின் மனைவி. 4.சி.வி.ராஜேந்திரன் (ஒன்ஸ்மோர்), பி.பாலாஜி பிரபு (விஷ்ணு) இவர், மறைந்த பட அதிபர்–டைரக்டர் எம்.பாஸ்கரின் மகன்.
விஜய் பேச்சு
விழாவில், விஜய் பேசியதாவது:–
‘‘பல பேர்களின் கூட்டு முயற்சியில் உருவாவதுதான் சினிமா. அதில், மற்ற எல்லோரும் உழைப்பை மட்டும்தான் தருகிறார்கள். தயாரிப்பாளர்கள் மட்டும்தான் உழைப்பையும், சம்பாதித்த பணத்தையும் போடுகிறார்கள். படம் பூஜை போடுவதில் ஆரம்பித்து, அந்த படம் ரிலீஸ் ஆகிற வரை 100 பேர்களுக்கு சம்பளம் கொடுத்து, சாப்பாடும் போட்டு ஒரு தாயைப்போல் கவனித்துக்கொள்கிறார்கள்.
அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் மனசு கஷ்டப்படுகிறது. என் ஆரம்ப கால தயாரிப்பாளர்கள் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு கை கொடுப்பது என் கடமை என்று தோன்றுகிறது. ஏன் இப்போது தோன்றுகிறது? என்று கேட்கலாம். நல்ல விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அதை உடனே செயல்படுத்திவிட வேண்டும்.
வெற்றி–தோல்வி
இதைப்பார்த்து இன்னும் சிலர் இதுபோன்ற உதவிகளை செய்தால், சந்தோஷப்படுவேன். வெற்றி, 2 மடங்கு நம்பிக்கையையும், தோல்வி 2 மடங்கு அனுபவத்தையும் கொடுக்கும். அந்த அனுபவங்களை கொண்டு தயாரிப்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.’’
இவ்வாறு விஜய் பேசினார்.
விழாவில், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் டி.இமான், டைரக்டர் நேசன், வினியோகஸ்தர் சிபு ஆகியோரும் பேசினார்கள். நிகழ்ச்சியை மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment