Search This Blog

Sunday, 17 November 2013

மனதை உலுக்கும் இராவண தேசம் (விமர்சனம்)

மனதை உலுக்கும் இராவண தேசம் (விமர்சனம்)

யாருக்கு வரும் இந்த துணிச்சல் என்ற கேள்வியே இப்படத்தைப் பார்த்த பின்பு தோன்றுகிறது. எந்தத் தடைகளும் இல்லாமல் இந்தப்படம் வெளிவருவதற்கு என்ன காரணம் என்பதே நமக்கு ஆச்சரியமான இரண்டாவது கேள்வி.

விடுதலைப் புலிகளைப் பற்றி சில முரண்பாடான கருத்துக்களும் இந்தப் படத்தில் சொல்லப்படுகிறது என்பதும் உண்மை. ஆனால், ஈழத்தில் இருக்கும் சராசரி மக்களின் நிலை என்ன என்பதையும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்திய விதம் இதயம் இருப்பவர்களின் கண்களை ஈரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை!

ஆயிரமாயிரம் சோகங்கள் அடங்கியிருக்கும் ஈழத்தமிழரின் வாழ்வில் இருக்கும் கதைகள் எண்ணிக்கையில் அடங்காதது. நான் சாவதற்குள் நம் சுதந்திரம் நமக்கு கிடைத்துவிடாதா… என நினைக்கும் மனிதர்கள். காணாமல் போன தன் மகன் தமிழகத்தில் அகதியாய் உயிருடன் இருப்பான் என நினைக்கும் வயதான தாய், தந்தை.

அதே இடத்தில் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஆட்டைய போடும் ஒரு மனசாட்சி இல்லாத புரோக்கர். தேசம் அமைதியான பிறகு நாம் திருமணம் செய்துகொள்ளலாமா என நினைக்கும் காதலர்கள். தேசத்திற்காக உயிரை துச்சமாக எண்ணும் மாவீரர்கள். சிங்களவர்களின் அட்டகாசம்.

குண்டு மழையில் ஒரே நொடியில் சுக்குநூறாய் சிதறிப்போகும் மக்கள் என பதர வைக்கும் யுத்தக் காட்சிகள், பாதுகாப்பு தருவதாக சொல்லி மக்களை அழைத்துக் கொண்டுபோய் சுட்டுத்தள்ளும் சிங்கள இராணுவம் என உணர்வுபூர்வமான காட்சிகள் முதல் பாதியில் தோன்றுகிறது.

இரண்டாம் பாதியில், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வழி தெரியாமல், படகு வழியாக தமிழகம் வந்துசேர நினைக்கிறார்கள் சிலர். கடல் பயணத்தில் இராணுவக் கப்பல் தென்பட, பதற்றத்தில் பயந்து படகில் இருப்பவர்கள் பதுங்கிக்கொள்ள, களைப்பில் அசந்து உறங்கிவிட… எந்த திசையில் பயணம் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கின்றனர்.

படகை தவறான திசையில் திருப்பிவிட… உணவு இல்லாமல், கடல் காற்றில் பலம் இழந்துபோய் ஒவ்வொருவராய் உயிரிழக்க, இறந்தவர்களின் உடல் நாற்றமெடுப்பதால் அவர்களின் உடலை கடலில் போட்டபடி மிச்சமிருப்பவர்கள் பயணம் செய்கிறார்கள்.

பத்து நாட்களையும் கடந்து கடலில் தத்தளிக்கிறது படகு. படகு கரை சேருமா? இன்னும் யார் யார் சாகப்போகிறார்கள்?என்னாகும்? என்று ஆயிரம் கேள்விகள் மனதில் எழும்ப… நம் இதயத்தில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கிறது, குற்ற உணர்வில் வார்த்தைகள் கிடைக்காமல் மௌனம் மட்டுமே மிஞ்சுகிறது.

கண்ணுக்கு தெரிகிற தூரம் வரை கடல்! நாம் கரையைப் பார்ப்போமா என உடலில் பலம் இல்லாமல் கண்களில் சந்தேகங்களோடு இருக்கும் மனிதர்களை பார்ப்பதற்கே நமக்கு துணிச்சல் இல்லாமல் போகிறது… படகில் உணவு தீர்ந்துபோக, குழந்தைக்கு பால் கொடுக்க உப்புத்தண்ணீரை குடிக்கும் தாய்… பசியில் கடலில் நீந்தும் பச்சை மீனை கடித்து திண்ணும் கதாநாயகன், இதயத்தில் கனவுகளையும் வயிற்றில் கருவையும் சுமந்து செல்லும் கதாநாயகியின் கரு கலைந்துபோவது, பசியில் குழந்தை கதறிக் கதறி அழும் நேரம் தூரத்தில் மிதக்கும் ஒரு இளநியை கதாநாயகன் கொண்டு வர, அதுவும் அந்த குழந்தைக்கு கிடைக்காமல் போக… என படத்தின் இரண்டாம் பாதியின்காட்சிகள் மனதை உலுக்குகிறது.

குழந்தை பசியில் கதறித்துடிக்க… ஒருவர் கடவுளை வேண்டுகிறார். உடனே மழை வருகிறது… இவ்வளவு கொடுமைகளுக்குப் பிறகும் கடவுளை நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

டெக்னிகலாக எடுத்துக்கொண்டால், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே அசரவைக்கிறது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். யுத்தக் காட்சிகள், புயல் வீசும் நேரம் படகு கடலில் தத்தளிப்பது போன்ற காட்சிகள் கிராஃபிச்ஸ் என்ற உணார்வை கொடுக்காத அளவிற்கு சிரமப்பட்டு அமைத்திருக்கிறார்கள்.

ஈழப்பிரச்சனை குறித்து நியாயமான பதிவை நம்மிடம் இருக்கும் இயக்குனர்கள் பதிவு செய்யாமல்விட்டதன் காரணமாக, இந்தியர்களிடையே ஈழம் குறித்த தவறான புரிதலே இருந்துவருகிறது. அது போலவே ராவண தேசம் படத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களும் சொல்லப்படுகிறது.

தேசத்திற்காக போராடும் இயக்கத்தின் மீது சில முரண்பாடான விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. ஈழப்போராட்டத்தை சரியான விதத்தில் பதிவு செய்யாமல் விட்ட படைப்பளிகளினால் வந்த விளைவு தான் இது!

இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் அஜய் நுத்தக்கி. இவர் ஒரு தெலுங்கர். உணர்வை சொல்வதற்கு மொழி தேவையில்லை என நிரூபித்திருக்கிறார் அஜய்.

ராவண தேசம் – உருவாக்கத்தில் நிறைவு! உள்ளடக்கத்தில் குறைவு!

No comments:

Post a Comment