‘‘திருட்டு வி.சி.டி. மூலம் எங்கள் கழுத்தை அறுக்காதீர்கள்’’-டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
‘‘சினிமா ஒரு கலை. கலைஞர்கள் எல்லாம் கடவுள். திருட்டு வி.சி.டி. மூலம் எங்கள் கழுத்தை அறுக்காதீர்கள்’’ என்று டைரக்டர் மிஷ்கின் உருக்கமாக பேசினார்.
படவிழா
கே.ஆர்.கண்ணன் தயாரித்து, ராமகிருஷ்ணன் டைரக்டு செய்து நடித்துள்ள ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று நடந்தது. விழாவில் டைரக்டர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசும்போது, மிக உருக்கமாக சில தகவல்களை வெளியிட்டார். அவர் பேசியதாவது:–
‘‘தமிழ் சினிமா இப்போது பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. விக்ரமனும், சேரனும் படங்களை எடுத்து முடித்துவிட்டு, திரைக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருக்கிறார்கள். படங்களின் ‘ரிலீஸ்’ தேதியை சீர்படுத்த வேண்டும். ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் இடையே குறைந்தபட்சம் 20 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
வலி–வேதனை
அப்படியிருந்தால்தான் அதை பத்து மாதத்தில் பிறந்த குழந்தையாக இருக்கும். இல்லையென்றால், ஒன்றரை நாளில் பிறந்த குழந்தை ஆகிவிடும். சினிமாவின் ஆரோக்கியமில்லாத நிலையை நினைக்கும்போது, வலிக்கிறது. இந்த வேதனை, பிரசவ வேதனையை விட கொடுமையானது. தயவு செய்து எல்லோரும் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு எடுங்கள்.
ஒரு காலத்தில், ஒரு படம் 375 நாட்கள் ஓடியது. இப்போது படம் திரைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே டி.வி.டி. வந்து விடுகிறது. என்னுடைய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் டி.வி.டி. இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டது. ஒரு படம் எடுப்பதற்கு குறைந்தபட்சம் 500 பேரின் உழைப்பு தேவைப்படுகிறது. அவர்கள் அத்தனை பேரின் உழைப்பும் திருட்டு டி.வி.டி.யால் வீணாகி விடுகிறது. திருட்டு டி.வி.டி. என்பது, 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது போன்றதாகும்.
கலை–கடவுள்
சினிமா ஒரு கலை. கலைஞர்கள் அனைவரும் கடவுள். திருட்டு டி.வி.டி. மூலம் தயவு செய்து எங்கள் கழுத்தை அறுக்காதீர்கள்.’’
இவ்வாறு டைரக்டர் மிஷ்கின் பேசினார்.
கேயார்
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், டைரக்டர்கள் கே.பாக்யராஜ், சேரன், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி,உள்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment