இரண்டாம் உலகம் படத்துக்காக ரத்தம் சிந்திய ஆர்யா!
காமெடியன் சந்தானத்தின் முதுகில் ஏறிக்கொண்டே சவாரி செய்யும் சில நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். யாராவது டைரக்டர்கள் கதை சொல்லச்சென்றாலே, என்னை பார்க்க வருவதற்கு முன்பு சந்தானத்தை பார்த்தீர்களா? என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்குமாம். ஏன் அப்படி கேட்கிறீர்கள்? என்றால், நான் கேட்கிற நேரத்தில் கால்சீட் தருவேன். ஆனால், சந்தானத்தின் கால்சீட் எப்போது கிடைக்கிறது என்பதுதானே நமக்கு முக்கியம் என்பாராம்.
அப்படி சந்தானம் என்கிற காமெடி குதிரையில் ஏறி ஜாலியாக நடைபோட்டு வந்த ஆர்யா, தற்போது செல்வராகவனின் இயக்கத்தில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் காமெடியை நம்பாமல் கதையையும், தனது திறமையையும் நம்பி களத்தில் இறங்கி கம்பு சுத்தியிருக்கிறார். இதில் அவருடன் அனுஷ்காவும் இணைந்திருக்கிறார். அதனால் இருவருக்கிடையேயும் பலத்த நடிப்புப்போட்டி நடைபெற்றதாம்.
இதைப்பற்றி ஆர்யா கூறுகையில், இரண்டாம் உலகம் படத்தைப்பொறுத்தவரை, நான் கடவுளுக்கு அடுத்தபடியாக எனது கேரியரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படம். யாருமே எதிர்பார்க்காத கெட்டப், பர்பாமென்ஸ் என்று அசத்தியிருக்கிறேன். அந்த அளவுக்கு என்னை நடிக்க வைத்திருக்கிறார் செல்வராகவன்.
மேலும், அனுஷ்காவின் நடிப்பும் பேசப்படும் வகையில் அமைந்திருப்பதால், தெலுங்கில் வர்ணா என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது என்று சொல்லும் ஆர்யா, இன்னும் எத்தனை படங்களில் நடித்தாலும், இப்படத்துக்காக ஜார்ஜியா காடுகளில் முகாமிட்டு கொசுக்கடியிலும், முள் செடிகளுக்கிடையேயும் சிக்கி ரத்தம் சிந்தி நடித்த அனுபவத்தை என்னால் சினிமாவில் இருக்கிற காலம் வரைக்கும் மறக்கவே முடியாது என்கிறார்.
No comments:
Post a Comment