Search This Blog

Wednesday, 23 October 2013

கமல், ரஜினியை இயக்குவேன்: டைரக்டர் ரோகிணி சிறப்பு பேட்டி!

கமல், ரஜினியை இயக்குவேன்: டைரக்டர் ரோகிணி சிறப்பு பேட்டி!

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்து ‘‘பவுனு பவுனுதான்’’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரோகிணி. ஹீரோயினாகவும், குணசித்திர நடிகையாகவும் வலம் வந்த ரோகிணி, ரகுவரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகையாக மட்டும் இல்லாமல் சமூக சேவகியாகவும் தன்னை மாற்றிக் கொண்டவர். சென்னையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பணிகளில் பங்கெடுத்து வருகிறார். தற்போது டைரக்டர் என்ற இன்னொரு அவதாரத்தையும் எடுத்திருக்கிறார். அப்பாவின் மீசை என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அதன் ஷூட்டிங் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* தீடீரென்று டைரக்டர் ஆனது எப்படி?

திடீரென்று ஆகவில்லை. ரொம்ப காலமாகவே மனதில் இருந்த கனவு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வந்த ஒரு செய்தி என் மனதை ரொம்பவே பாதித்தது. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதினேன். அதை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி திரைக்கதை அமைத்தேன். அதுதான் அப்பாவின் மீசை.

* அப்பாவின் மீசை என்றால் தந்தை மகன் உறவு பற்றிய கதைதானே?

படத்தோட பெயரை பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும். ஆனால் இது 14 வயது சிறுவனைப் பற்றிய கதை. பொதுவாக எல்லோரும் ஒரு ஆணின் வாழ்க்கையில் 18 வயதுதான் முக்கியமானது என்பார்கள். ஆனால் 14வது வயதுதான் முக்கியமானது. அந்த வயதுதான் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கும். அப்படி ஒரு 14 வயது சிறுவனின் வாழ்க்கையில் வந்து செல்லும் மனிதர்கள். அவனிடம் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதுதான் படத்தோட தீம்.

* டைரக்ஷன் யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?

20 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். சினிமாவை பார்க்கிறேன். இதைவிட வேறு யாரிடம் கற்க வேண்டும், நான் பெற்ற அனுபவங்களைக் கொண்டுதான் என் படத்தை டைரக்ட் செய்கிறேன். நான் வேலை செய்த படங்களில் வெறும் நடிகையாக இல்லாமல் மற்ற விஷயங்களையும் கவனித்து வந்திருக்கிறேன். டைரக்டர் முதல் லைட் பாய் வரை எப்படி வேலை செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இதைவிட டைரக்டராவதற்கு வேறென்ன தகுதி வேண்டும்.

* பெண் டைரக்டர்கள் செண்டிமெண்ட், அல்லது காமெடி படங்களையே இயக்குகிறார்கள். நீங்கள் எப்படி?

இந்தப் படம் எமோசனலான, யதார்த்தமான படம். கொஞ்சம் செண்டிமெண்டும் இருக்கும். ஆனால் என்னாலும் கமர்ஷியல் படங்கள் இயக்க முடியும். வாய்ப்பு கிடைத்தால் கமல், ரஜினியை இயக்கி அதை நிரூபிப்பேன்.

* அப்பாவின் மீசையில் புதுசா என்ன பண்ணியிருக்கீங்க?

படம் ரிலீசாகும்போது நிறைய தெரிய வரும். இப்பவே சொல்லணும்னா படம் புல்லா லைவ் ரிக்கார்டிங்தான். தனியா டப்பிங் கிடையாது. தமிழ் தெரியாத இரண்டு பேருக்கு மட்டும் டப்பிங் பேச வச்சிருக்கேன். எந்த ஒரு சீன் எடுக்கும்போதும் அங்க என்ன லைட்டிங் இருக்குமோ அதுதான் லைட்டிங் எக்ஸ்ட்ராவா எதுவும் பண்ணல.

* என்ன இருந்தாலும் ஒரு படத்துக்கு ஸ்டார் வேல்யூ இருக்கணுமே?

நான் டைரக்ட் பண்றேன், பசுபதி, நித்யாமேனன், நாசர், சலீம் குமார் நடிச்சிருக்காங்க இதைவிட ஸ்டார் வேல்யூ வேணுமா என்ன? ஆனாலும் என்னை பொருத்தவரை ஒரு படத்துக்கு ஸ்டார் வேல்யூவை விட, ஸ்டோரி வேல்யூதான் முக்கியம்.

* டைரக்டர் ஆயிட்டா நடிப்பை கைவிட்டுவிடுவீங்களா?

நடிப்புதாங்க ரோகிணியை அடையாளம் காட்டுச்சு. அதை எப்படி விட முடியும். நடிப்புல நான் பெருசா எதையும் சாதிக்கல. ஒரு நடிகையா நான் முழுமையான திருப்தியை பெறவில்லை. நான் யார்கிட்டேயும் போய் சான்ஸ் கேக்குறதில்ல. என்னை தேடி வர்ற படங்கள்ல நடிக்கிறேன்.

* சமூக சேவையிலும் தீவிரமா இருக்கீங்களே?

இதை ஒரு கேள்வியா கேட்கிறதே தப்புன்னு நினைக்கிறேன். சமூக சேவையில ஒருத்தர் இல்லைன்னாத்தான் ஏன் சமூச சேவையில நீங்க இல்லைன்னு கேக்கணும். ஒவ்வொரு மனிதனோட கடமையே சக மனிதனுக்கு உதவுறதுதான். ஏதோ என்னால முடிஞ்ச சில விஷயங்கள் பண்றேன். பெருமையா சொல்லிக்கிற அளவுக்கு எதுவும் இல்லை.

* சினிமால உங்க லட்சியம் தான் என்ன?

பெருசா ஒண்ணும் இல்லை. கடைசி வரைக்கும் சினிமாவுல இருக்கணும், நடிகையாக, டைரக்டரா இல்லாவிட்டாலும் லைட்வுமனாகூட இருப்பேன். அல்லது டிராலி தள்ளிக்கிட்டாவது சினிமாவுல இருப்பேன்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment