பவர்ஸ்டார் சீனிவாசன் மீது குண்டர் சட்டம் பாய்கிறது; வங்கி கணக்குகள் முடக்கம்; ரூ.150 கோடி சொத்து விவரம் சேகரிப்பு
மோசடி புகாரில் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர், “பவர் ஸ்டார் சீனிவாசனை, மேலும், மூன்று வழக்குகளில் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், அவரது வங்கி கணக்குகளை, போலீசார் முடக்கியுள்ளனர். அத்துடன், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்கள், எங்கெங்கு இருக்கிறது என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஆந்திர தொழிலதிபருக்கு, 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, கடந்த, 26ம் தேதி, “பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். இதேபோல், ஏராளமானோரிடம், மோசடி செய்துள்ளதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சண்டிகரை சேர்ந்த ஜெகத்சிங்கிடம், 2 கோடி ரூபாய்,கோவாவை சேர்ந்த பிரகாஷ் ஜே.ரத்தோரிடம், 16.5 லட்சம் ரூபாய், சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதனிடம், 70 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கொடுத்த புகார்களின்அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், “பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும், மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மூன்று நாள் போலீஸ் காவலுக்கு பிறகு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, “பவர் ஸ்டார் சீனிவாசனை மீண்டும் கைது செய்ய, போலீசார் திட்டமிட்டுள்ளனர். புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதால், அவர் மீது, குண்டர் சட்டம் பாய்வது உறுதியாகிவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலீசார் விசாரணையின் போது, பேராசைப்பட்டு, இது போன்று மோசடியில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை விற்று, தன்னிடம் பணம் செலுத்தியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதாகவும், அவர் கூறியுள்ளார்.
வக்கீலிடமும் கைவரிசை: பெசன்ட் நகரை சேர்ந்த ஜெகநாதன் வக்கீலாக உள்ளார். இதுதவிர, கட்டுமான தொழிலும் செய்து வருகிறார். தனது தொழிலை அபிவிருத்தி செய்ய, 2012 மார்ச் மாதம், “பவர் ஸ்டார் சீனிவாசனை சந்தித்து, இரண்டு கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். அதற்கு “பவர் ஸ்டார் சீனிவாசன், குறைந்தபட்ச கடன் தொகையே, ஐந்து கோடி ரூபாய் தான் எனக்கூறி, தன்னை பெரிய ஆள் போல, காட்டிக் கொண்டார். இதையடுத்து தனக்கு கூடுதலாக, நான்கு கோடி ரூபாய் வேண்டும், என, வக்கீல் ஜெகநாதன் கேட்டுள்ளார். இதற்காக, 70 லட்ச ரூபாயை, “பவர் ஸ்டார் சீனிவாசன் கமிஷனாக வாங்கியுள்ளார். ஆனால், சொன்னபடி கடன் கொடுக்காமல், கம்பி நீட்டிவிட்டார்.
“பவர் ஸ்டார் பின்னணி: மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த “பவர் ஸ்டார் சீனிவாசன், காமராஜர் பல்கலையில் பி.ஏ.,பட்டம் பெற்றவர். பின், சீன பல்கலையில், “அக்குப்பஞ்சர் சிகிச்சை அளிக்கும் படிப்பு படித்துள்ளார். மதுரையை சேர்ந்த விஜயா என்ற பெண்ணை முதலாவதாக, திருமணம் செய்தார். பின் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து, தற்போது, ஜூலி என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.
இவருக்கு, “மருத்துவமனை ஆரம்பிக்க வேண்டும், சினிமாவில் நடித்து, பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு அரசியல் புள்ளியை வைத்து, மருத்துவமனை திறப்பு விழாவை நடத்தினார். பின், “பாபா டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, கடன் தருவதாக கூறி, கமிஷன் தொகையை பெற்று, பலரை ஏமாற்றி வந்துள்ளார். இதற்கு கிறிஸ்டோபர், சுதர்சன் உள்ளிட்டோர் புரோக்கர்களாக இருந்துள்ளனர்.
இந்த பணத்தை வைத்து, “லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை ஆகிய திரைப்படங்களை எடுத்துள்ளார். கமிஷனாக பெற்ற பணத்தில், சென்னை அண்ணாநகர் பகுதியில் மட்டும், ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக, சொத்து வாங்கி வைத்துள்ளார். 150 கோடி ரூபாய் மதிப்பிலான, சொத்துக்களை தனது பெயரிலும், “பினாமிகள் பெயரிலும் வாங்கி குவித்துள்ளார் என, தெரிய வந்துள்ளது.
வங்கி கணக்கு முடக்கம்: மேலும், இவருக்கு, ஐந்து ஆசை நாயகிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏமாற்றி சம்பாதித்த பணத்தை, அவர்கள் பெயரில் வங்கிகளில், முதலீடு செய்துள்ளார். தனது பெயரில், சென்னை அண்ணா நகர், சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களில் உள்ள, சில வங்கி கிளைகளில், கணக்கு வைத்துள்ளார். அந்த கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். இதுத்தவிர, மோசடி செய்து சம்பாதித்த பணத்தில், எங்கெல்லாம், சொத்து வாங்கி குவித்திருக்கிறார் எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அவரது மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் தராததால், அவர்கள், மருத்துவமனையை இழுத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment